×

2 சாமுவேல் : 5

  • 1 : அக்காலத்தில் இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.
  • 2 : சவுல் எங்கள்மேல் ராஜாவாயிருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டு போனவரும் நடத்திக்கொண்டுவந்தவரும் நீரே; கர்த்தர்: என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள்.
  • 3 : இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கை பண்ணினபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள்.
  • 4 : தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்.
  • 5 : அவன் எப்ரோனிலே யூதாவின்மேல் ஏழுவருஷமும் ஆறுமாதமும், எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் முப்பத்துமூன்று வருஷமும் ராஜ்யபாரம் பண்ணினான்.
  • 6 : தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.
  • 7 : ஆனாலும் தாவீது சீயோன்கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
  • 8 : எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு.
  • 9 : அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலும் இருக்கிற மதிலைக் கட்டினான்.
  • 10 : தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
  • 11 : தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாதிபதிகளையும், கேதுரு மரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.
  • 12 : கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை உயர்த்தினார் என்று தாவீது கண்டறிந்தபோது,
  • 13 : அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் ஸ்திரீகளையும் கொண்டான்; இன்னும் அதிக குமாரரும் குமாரத்திகளும் தாவீதுக்குப் பிறந்தார்கள்.
  • 14 : எருசலேமிலே அவனுக்குச் சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
  • 15 : இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா,
  • 16 : எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்னும் பேர்களையுடைய குமாரர் பிறந்தார்கள்.
  • 17 : தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு அரணிப்பான இடத்துக்குப் போனான்.
  • 18 : பெலிஸ்தரோ வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
  • 19 : பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக் கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர்: போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார்.
  • 20 : தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து, அங்கே அவர்களை முறியடித்து: தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல, கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான்.
  • 21 : அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள்.
  • 22 : பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
  • 23 : தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
  • 24 : முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.
  • 25 : கர்த்தர் தாவீதுக்குக் கட்டளையிட்ட பிரகாரம் அவன் செய்து, பெலிஸ்தரைக் கேபா துவக்கிக் கேசேர் எல்லைமட்டும் முறிய அடித்தான்.